தோழர் எஸ். ராமநாதன். குடி அரசு - அறிக்கை - 27.11.1932 

Rate this item
(0 votes)

தோழர் ராமநாதன் அவர்கள் ஐரோப்பாவிலேயே தங்கிக் கொண்ட விஷயத்தைப் பற்றி பல பத்திரிகைகள் பல விதமாக எழுதி பொது ஜனங்களுக்குள் ஒரு வித தப்பு அபிப்பிராயத்தை உண்டு பண்ண முயற்சிப்பதாய் தெரிய வருகின்றது. அது என்னவெனில் 

  1. தோழர் ராமநாதன் கையில் ஒரு காசு கூட கொடுக்காமல் அவரை காயலாவுடன் பிரான்ஸ் ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு ஓடி வந்து விட்டதாக ஒரு கூற்று. 
  2. தோழர் ராமநாதனை மார்சேல்ஸ் நடுத் தெருவில் கையில் ஒரு காசு கூட இல்லாத நிலையில் விட்டு விட்டு வந்ததாக மற்றொரு கூற்று. 
  3. தோழர் ராமநாதனை மார்சேல்ஸ் தெருக்களில் ஒரு காசு கூட நான் கொடுக்காமல் விட்டு விட்டு வந்து விட்டதாகவும், ஆனால் தன்கையில் தன் தங்கை எவ்வளவோ கஷ்டப்பட்டு சேர்த்து வைத் திருந்ததை அனுப்பி இருப்பதாகவும், அது சிறு தொகை - செலவுக்கு போராதது போலவும், குறிப்பிட்டு இங்கு ஒரு கனவானை தனக்கு கடனாக 300 ரூபாய் அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருப்பதாய் மற்றொரு கூற்றும். இன்னும் பல. 

மேல் கண்ட இவைகளையெல்லாம் நிரூபிக்க தோழர் ராமநாதனால் எழுதப்பட்ட கடிதங்கள் என்பதாக சில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கடிதங்களேயாகும். அவையாவன 1.4. 11. 32 தேதி தாருல் இஸ்லாம் உப தலையங்கம். 

"எமது நண்பர் ஒருவருக்குத் திரு. எஸ். இராமநாதன் அவர்கள் எழுதிய கடிதத்திலிருந்து. அவர்கள் ஜினீவாவில் (ஸ்விட்ஜர்லாந்து) இருப்பதாகவும், பிரான்சில் அவரை ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு, தோழர் ஈ.வெ.ராவும், ராமும் ருஷ்யா போய் விட்டதாகவும் செய்தி எட்டியது." மற்றொன்று ஜினிவாவிலிருந்து, 

”நாயக்கரது வருகையைப் பற்றி தெரிந்திருப்பீர்கள் என்று நினைக் கிறேன். கையில் ஒரு காசு கூட இல்லாத நிலையில் அவர் மார்செய்வஸ் வீதிகளில் என்னை விட்டு விட்டு வந்து விட்டார். அது அவருடைய சுபாவம், ஆகையால் அதைப் பற்றிக்குறை கூறுவதற்கில்லை. என்னுடைய சகோதரி சேகரித்து அனுப்பக் கூடிய சிறிய தொகையைக் கொண்டு கஷ்டத்துடன் நாட்களைக் கழித்து வருகின்றேன், தங்களுக்கு வேறு பலவித செலவு இருக்குமென்பது தெரிந்தாலும், தாங்கள் இது சமயம் ரூ. 300 கடனாகக் கொடுக்க கடமைப் பட்டுள்ளீர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தொகையை தங்களால் அனுப்ப முடியாதிருந்தால் கூடுமானதையாவது அனுப்ப வேண்டுகிறேன்” என்பதாகும். 

இவற்றை சிலர் நம்பியும், சிலர் நம்பாமலும், இதன் உண்மைதான் என்னமாய் இருக்கக் கூடும் என்பதை அறிய ஆசைப்பட்டும் இருப்பதாக தெரிய வருகிறது. 

இதைப் பற்றி இது சமயம் மிகச் சுருக்கமாகவே விளக்கினால் போதும் என்று கருதுகிறேன். ஏனெனில் தோழர் ராமநாதன் இங்கு பக்கத்தில் ஆஜர் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் மேல்கண்ட கூற்றுகளைப் பொருத்த வரையில் தான் பொது ஜனங்களும் உண்மை அறிய ஆசைப்படுவார்கள் ஆனதினாலும் பத்திரிகைகளில் காணப்பட்ட மேற்கண்ட கூற்றுக்கள், அவை தானாகவே ஒன்றுக் கொன்று முரணாய் இருப்பதை வாசகர்கள் கூர்ந்து கவனித்தாலே ஒருவாறு உண்மை உணரலாம். ஆனதினாலும், மற்றும் அதைப் பரப்ப முயற்சிக்கின்றவர்களின் மனப்போக்கை கவனித்துப்பார்த்தால் என்ன கருத்துடன் இந்த பிரசாரம் செய்யப் படுகிறது என்பது தெளிவாகுமான தினாலும் வெகு சுருக்கத்திலேயே இருப்பது நலம் என்று கருதுகிறேன். 

தோழர் ராமநாதன் காயலாவுடன் எந்த ஆஸ்பத்திரியிலும் விட்டு விட்டு வரப்படவில்லை என்பது அவர் கடிதங்கள் என்பவைகள் ஒன்றிலி ருந்தே வெளிப்படுகிறது. அவர் கையில் ஒரு காசு கூட இல்லாமல் விட்டு விட்டு வரப்படவில்லை என்பதும் அவரது கடிதங்கள் என்பவைகளின் மற்றொன்றிலிருந்து விளங்குகின்றது. ஆகவே பிரசாரத்திற்கு ஆதாரமான இரண்டு கூற்றுகளும் உண்மையில்லை என்பதை நான் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. ஆனால் தோழர் ராமநாதனால் எனக்கு எழுதப்பட்ட இரண்டு கடிதத்தை இதில் பிரசுரிக்கிறேன். 

அவ்விரண்டு கடிதத்தையும் பார்த்தால் ஒன்று தோழர் ராமநாதன் இந்தியாவுக்கு வர இஸ்டப்படவில்லை என்பதும், நாம் அழைத்தும் அதை மறுத்திருப்பதும், என்னை மாத்திரம் தனியாய் இந்தியாவுக்குப் போகும்படி வலியுறுத்தி இருப்பதும் விளங்கும். (இதன் காரணம் அவரது குடும்பத்தாருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் தெரியும் மற்றொன்று நான் இந்தியா வந்து சேர்ந்த பிறகு தோழர் ராமநாதனால் ஜினிவாவிலிருந்து எழுதி இருப்பது விளங்கும். அவையாவன: 

Madrid Hospital 

17-8-1932 

நமஸ்காரம், 

எனக்கு உடம்பு கொஞ்சம் சௌக்கியமாய் விட்டபடியால் உடுப்பு தேவையாய் இருக்கிறது. அதற்கு சவுக்காரம் போடாதவைகளை வீட்டுக் காரியிடம் கொடுத்து போடச் சொல்லி காயவைத்து ஒரு செட்பூட்ஸ் Socks உடன் அனுப்பி வைக்க வேண்டுகிறேன், கை பையில் Brush Paste சவரம் பண்ணிக் கொள்ள கத்தி பெட்டி சோப்பும் கடிதம் எழுத காகிதம். கவர். பென்சில், ஸ்டாம்பும் அனுப்ப வேண்டுகிறேன். அவ்விடமுள்ள என் புஸ்தகத் தில் Bertrand Russel அனுப்புவது நலம். 

தாங்கள் எனக்காக காலம்கடத்தாமல் மேல் கொண்டு போவதே சரி என்று மறு படியும் தெரிவித்துக் கொள்ளுகிறேன், 

இங்கு வேலைக்காரர்களுக்கு ஏதாவது கொடுப்பது வழக்கமாகையால் சில்லரை கொஞ்சம் அனுப்ப வேண்டுகிறேன். 

ராமநாதன். குறிப்பு:- இந்த ஆஸ்பத்திரி மாட்ரிட்டுக்கு மேல் தூரத்தில் Etian wictoriss என்ற இடத்தில் கட்டப்பட்டது. அங்கிருந்து மாட்ரிட்டுக்கு எழுதப்பட்டது. 

  1. Ramanathan C/O Thomas cook. Geneva, Switzer Land, 

26-10-32 

அன்புள்ள அய்யா, 

மேற்கண்ட எனது விலாசத்திற்கு “சூடி அரசு"பத்திரிகை அனுப்பி வர வேண்டுகிறேன். மதத்தைப் பற்றிய புத்தகம் வெளியிட்டிருந்தால் நான்கு பிரதிகள் அனுப்பவும். பர்லினில் இருந்த ராமு இந்தியாவுக்குத் திரும்பு வதாகச் சொல்லிவிட்டு இங்கிலாந்து போனதாகக் கேள்விப்படுகிறேன், அவ்விடம் திரும்பிவந்த விபரம் எழுத வேண்டுகிறேன். 

தங்கள் அன்பன் ராமநாதன். 

 

இந்தக் கடிதம் நான் இந்தியாவுக்கு வந்ததுமேல் 13-11-32. தேதியில் ஈரோடு விலாசத்திற்கு கிடைத்தது. 

இந்தக் கடிதங்கள் தோழர் ராமநாதனின் நிலையையும், என்ன நடந்திருக்கக்கூடும் என்பதையும் தானாகவே சொல்லும். 

தவிர தோழர் ராமநாதன் கையில் பணம் இல்லை என்பது உண்மை அல்ல என்பதை அவர் மற்றொரு நண்பருக்கு எழுதி இருப்பதாக சொல்லப் படும் கடிதங்கள் ஒன்றின் மூலமாகவே விளங்குமானாலும் அதைப் பற்றியும் சற்று விளக்குவோம். 

அவர் இந்தியாவுக்குத் திரும்புவது இல்லை என்கின்ற விஷயத்தை தனது சகோதரிக்கு சூசனையாய் காட்டி எழுதி செலவுக்கு அனுப்பும் படி எழுதிய கடிதத்தின் மீது அவ்வம்மையார் வருத்தப்பட்டு அவசியம் திரும்பி வரும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் மற்றும் அவர் கேட்டப்படி 300 ரூபாய் அனுப்பி இருந்த தொகையின் செக் ஒன்று என்னை அவர் பயணம் அனுப்பும் முதல்நாள் வரையில் மாற்றாமல் வைத்திருந்து அன்று தான் மாற்றிக் கொண்டார். இதோடு அவர் இந்தியாவுக்கு வருவதில்லை என்று சொன்ன பிறகும், அவர் தனக்கு பணம் தேவையில்லை என்று சொன்ன பிறகும் அவர் கப்பலை விட்டு இறங்கும் போது நான் கொடுத்த 5 பவுனும் மற்றும் அவரிடம் சில்லரையாய் இருந்த தொகையும் சேர்த்து சற்றேறக் குறைய 400 நானூறு ரூ.போல் அவர் கைவசம் இருந்தது. அவரது தங்கை அனுப்பிய ரூபாய் சுமார் ஒரு மாத காலமாய் செக்கு மாற்றாமலும், அதிலி ருந்து செலவழிக்கச் செய்யாமலும் இருக்கும்படி வற்புறுத்தியவன் நானே யாகும். 

அன்றியும் அவர் ஜினிவாவுக்குப் போவதாய் பயணம் சொல்லி கொண்டு கப்பல் விட்டு இறங்கும் போது எப்பொழுது தான் இந்தியாவுக்கு வருவதாக உத்தேசம் என்று கேட்டதற்கு, அதைப்பற்றி நான் முடிவு செய்ய வில்லை. இரண்டு மூன்று மாதத்தில் திரும்பலாம் என்று யோசித்திருக்கிறேன்" என்று சொன்னார். 

எப்படியாவது இந்தியாவிற்கு திரும்பி வருவதுதான் கிரமமாகும் என்றும் சொன்னேன், கப்பல் புறப்பட இருந்ததால் என்னிடம் ரூபாய் பெற்றதும் ஆகட்டும் என்று சொல்லிக்கொண்டு அவசரமாய் கப்பலை விட்டு இறங்கினார். 

ஆகவே கையிலும் பணம் இருக்க நானும் கொடுத்து வந்திருக்க இந்தியாவுக்கு வருவதானால் இனியும் பணம் அனுப்பச் செய்கிறேன் என்று சொல்லியும் வந்திருக்க, தோழர் ராமநாதனை கையில் ஒரு காசும் இல்லாமல் நோயுடன் ஆஸ்பத்திரியில் விட்டு வந்ததும், மார்செல்ஸ் தெருவில் விட்டு வந்ததும் எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்கக் கூடும் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. நேரில் நடந்த வார்த்தைகள் என்பது எப்படி இருந்தாலும் இதில் பிரசுரிக்கப்பட்ட எல்லா கடிதங்களிலிருந்தும் பொது ஜனங்கள் கருத வேண்டிய விஷயம் மூன்றேயாகும். 

  1. தோழர் ராமநாதன் அவருடைய இந்திய நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் என்பவை கற்பனைக் கடிதங்களாக இருக்குமா? 
  2. அல்லது எனக்கு எழுதப்பட்டக் கடிதங்கள் என்பவை கற்பனையாக இருக்குமா? 
  3. எல்லாக் கடிதங்களும் தோழர் ராமநாதன் அவர்களால் உண்மையாகவே எழுதப்பட்டிருக்குமானால் அவர் நிலைமைதான் என்னவாக இருக்கக் கூடும் என்பவைகளேயாகும். 

இது விஷயத்தில் எப்படி வேண்டுமானாலும் கருதிக் கொள்ளவோ, முடிவு செய்து கொள்ளவோ வாசகர்களுக்கு பூரண சுதந்திரமும் போதிய அனுபவமும் உண்டு என்றே கருதி இதுசமயம் இத்துடன் முடிக்கின்றேன். 

ஈ. வெ. ரா. 

குடி அரசு - அறிக்கை - 27.11.1932

Read 55 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.